திருச்சி:சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 'ஹிஸ்புத் தஹ்ரீர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மகனான அப்துல் ரகுமான் (25) திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருக்கிறார். இதை அப்துல் ரகுமான் செல்போன் டவர் மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அறிந்த நிலையில், இன்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அப்துல் ரஹ்மானின் உறவினர் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது விசாரணை முடிந்து அப்துல் ரஹ்மானை தஞ்சாவூர் அழைத்துச் சென்றுள்ளனர்.