தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது! வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்! - Nellai railway crossing flyover

Railway crossing flyover opened today: திருநெல்வேலி மகராஜநகர் பகுதியில், மக்களின் வசதிக்காக கட்டப்பட்ட புதிய ரயில்வே கிராசிங் மேம்பாலத்தில், 7 ஆண்டுகளுக்குப் பின் இன்று போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாகனப் போக்குவரத்தின் கழுகுப் பார்வை காட்சிகள்
ரயில்வே நிர்வாகத்தால் 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 4:55 PM IST

ரயில்வே நிர்வாகத்தால் 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது

திருநெல்வேலி: நெல்லை சிவந்திபட்டி சாலையில், பாளையங்கோடை மகராஜநகர் - தியாகராஜநகர் இடையே, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில்வே பாதை செல்கிறது. இதில் மகராஜநகர் பகுதியில் ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது. காலை, மாலை என முக்கியமான நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் என அனைவரும் சிரமம் அடைந்து வந்தனர்.

எனவே, இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, நிதி ஒதுக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ரயில்வே கிராசிங்கின் இரண்டு பகுதிகளிலும் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டையும் இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் முடிக்க வேண்டும். ஆனால், இதற்கு காலதாமதமானதையடுத்து, 7 ஆண்டுகளாக ரயில்வே கிராசிங்கிற்கு இருபுறங்களிலும் பாலம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பாலத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து, ரயில்வே நிர்வாகம் பாலத்தின் இரண்டு முனைகளையும் இணைக்கும் பணியை கடந்த சில மாமங்களுக்கு முன் தொடங்கியது. 26.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது இந்த பாலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, 7 ஆண்டுகளுக்கு பின் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய பாலத்தின் கழுகுப்பார்வை மற்றும் வாகனங்கள் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் முன்பு தடுப்பு வேலி.. மக்கள் கடும் எதிர்ப்பு - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details