திருநெல்வேலி:நெல்லையில் சிறப்பு வாய்ந்த திருவிழாவான நெல்லையப்பர் தேர் திருவிழா இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. இதில் ஆட்சியர் கார்த்திகேயன், எம்.பி ராபர்ட் புரூஸ் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் தேரை இழுக்க தொடங்கிய சில வினாடிகளில் தேரின் வடம் அருந்தது. இதனை தொடர்ந்து மாற்று வடம் கட்டப்பட்ட நிலையில், மீண்டும் அடுத்தடுத்து ஐந்து முறை வடம் அறுந்ததால் தேர் திருவிழா மிகவும் தாமதமாக நடைபெற தொடங்கியது.
இதனை தொடர்ந்து தேரை இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு அதன் உதவியோடும் தேர் இழுத்து வரப்பட்டது.இதனால் நான்கு வடம் இருக்க வேண்டிய தேரில் இரண்டு வடம் மட்டுமே இருந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள தேரிலிருந்து வடத்தை கொண்டு வர இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர் அதன்படி தற்போது திருச்செந்தூர் கோயிலில் இருந்த வடம் நெல்லைக்கு கொண்டுவரப்பட்டது.