கேரள மருத்துவக் கழிவு விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - NELLAI KERALA MEDICAL WASTE ISSUE
நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் தொடர்பான வழக்கு விசாரணையில், ஒப்பந்த நிறுவனத்தின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது.
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் (ETV Bharat Tamil Nadu)
சென்னை: திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வியெப்பியுள்ளது.
நெல்லையில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
அப்போது, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெல்லை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் ஆறு இடங்களில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக புற்றுநோய் மருத்துவமனை, ஹோட்டல் மீது நடவடிக்கை எடுத்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் (ETV Bharat Tamil Nadu)
இழப்பீடு வேண்டும்
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு கேரள அரசிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும். அந்த இழப்பை கொண்டு பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இழப்பீட்டை வசூல் செய்வதற்கு கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தொடர்ச்சியாக நோட்டீஸ் மட்டுமே அனுப்பி வருவதாகவும் கேரள அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக இது மூன்றாவது வழக்கு. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு பெறுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளா அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கின் விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளின் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)
மருத்துவக் கழிவு விவகாரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளாவின் சில மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது. தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சிகள் எச்சரித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு, இந்த பிரச்னையை தாமாக முன்வந்து விவாதத்துக்கு எடுத்தது.
தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுண உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றும் வசதிகளை ஏற்படுத்தாத மருத்துவமனைக்கு எப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டது என கேள்வியெழுப்பி, இதை மூன்று நாள்களுக்குள் அகற்ற கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), மருத்துவக் கழிவுகளின் மூலமாக கருதப்படும் ரிஜினல் கேன்சர் சென்டர் (Regional Cancer Centre), கிரெடன்ஸ் மருத்துவமனை (Credence Hospital) மற்றும் திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள லீலா ஹோட்டல்ஸ் (Leela Hotels) ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (PCB) எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.