திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் முன்பு தீபக் ராஜா என்ற இளைஞர் மர்ம நபர்களால் கடந்த 20ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து ஆறு தனிப்படைகள் அமைத்து நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் தலைமையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க போவதில்லை என்று கூறிவரும் தீபக் ராஜா உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐயப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் இந்த 4 பேர் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும், நேரடியாக தீபக் ராஜாவை வெட்டிக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராடி வருகின்றனர்.
இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் திருச்சி பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நவீன், லெஃப்ட் முருகன், லட்சுமி காந்த், சரவணன் ஆகிய நான்கு பேர் அங்கிருந்தது தெரிய வந்தது.
அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தபோது நால்வரும் தப்பி ஓடி உள்ளனர். இதில் நவீன், லெஃப்ட் முருகன் ஆகிய இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர்.
காயம் ஏற்பட்ட இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த வழக்கில் எட்டு பேர் பிடிபட்டு நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரைப் பிடிப்பதற்கு தனி படை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழிக்குப் பழி:தற்போது பிடிபட்டுள்ள நான்கு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, பழிக்கு பழியாக தீபக் ராஜாவை அவர்கள் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
அதாவது வடிவேல் முருகன் கொலையில் தீபக் ராஜாவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே தீபக் ராஜாவை தீர்த்துக்கட்ட வடிவேல் முருகன் தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த நவீன் என்பவரை அணுகி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நவீன் தனது அடியாட்களை வைத்து சம்பவத்தன்று தீபக் ராஜாவை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் தற்போது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வாக்கிங் சென்றவர் மீது பைக் மோதி விபத்து.. கேரளாவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!