சென்னை:நீட் தேர்வானது இந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், விண்ணப்பம் செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 969 மாணவர்களும், சென்னை மாவட்டத்தில் 827 மாணவர்களும், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 730 மாணவர்களும் என 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து உள்ளது. 2023-2024 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு நீட் நுழைவு தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 12ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் முடிந்த பின்னர், மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு கல்வி மாவட்டத்திற்கு, அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் (Smart Class Room) வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும்.