தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்; சபாநாயகர் சூசகம்! - Speaker Appavu on Ponmudi case

Speaker Appavu on Ponmudi case: பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, சட்டப்பேரவை முதன்மைச் செயலருடன் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

சபாநாயகர் சூசகம்
பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 5:10 PM IST

பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்

திருநெல்வேலி: மக்களவை உறுப்பினர்கள் ராகுல் காந்தி, முகமது பைசல், அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அது போல் பொன்முடி விவகாரத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியானது நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இன்று (மார்.12) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனை அங்காடியையும் பார்வையிட்ட அவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக அரசின் 33 மாதக் காலச் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்தியக் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதே போல் பலரும் பேசி வருகிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்தியக் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம், இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம், அவர்கள் மட்டுமே சொத்து வாங்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் வெள்ளைக்காரர்கள் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் வருகைக்கு பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது.

அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத் தாண்டி இந்திய, தமிழகக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டனர். அவர்கள் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்தார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்குக் கிறிஸ்துவ மிசனரிகளே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான், எனவே கால்டுவெல்லை இங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது அவருடைய தண்டனைக்குத் தடை விதித்துள்ளது.

எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக, வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரங்களில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்டப்பேரவை முதன்மைச் செயலருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும்”, என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என்று கூறிய விவகாரம்.. விமர்சனங்களுக்கு குஷ்பு எழுப்பும் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details