தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டில் 6 கிலோ தங்கம் பறிமுதல்.. அயன் பட பாணியில் தொடரும் சம்பவம்! - gold smuggling case - GOLD SMUGGLING CASE

துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 10:31 AM IST

சென்னை: துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசிய தகவல் கொடுத்தனர்.

மலேசிய தங்கக் கட்டிகள்: இதனையடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மலேசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்களை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

3 கிலோ தங்கம்:இதனால் அவர்களுடைய உடமைகளை சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும் ரகசிய அறைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த சூட்கேஸ் ரகசிய அறைகளை உடைத்துப் பார்த்தபோது தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்படி, இரண்டு சூட்கேஸ்களிலும் 3 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.1 கோடி ஆகும். இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:"அது எப்படி சரியாகும்?”.. தமிழிசைக்கு திருமாவளவன் கேள்வி!

மேலும் இரண்டு குருவிகள்:அதோடு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, துபாயிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் மற்றொரு பயணிகள் விமானத்தில் மேலும் 2 பயணிகள் இதே போல் தங்கம் கடத்தி வருவதாக தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, சுங்க அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சந்தேகத்துக்கு இடமான அந்த இரண்டு பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களின் சூட்கேஸ்களை திறந்து பார்த்து சோதித்த போது, அவர்களின் சூட்கேஸ்களிலும் ரகசிய அறைகள் இருந்தது தெரிய வந்தது. அதை உடைத்து பார்த்தபோது, 3 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.1 கிலோ இருக்கும்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவர்களையும் கைது செய்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் விசாரணை நடத்திய போது, இவர்களும் மலேசிய நாட்டிலிருந்து வந்த இரண்டு கடத்தல் பயணிகளும் ஒரே கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் இவர்கள் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலிடம் கூலிக்காக இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இந்த 4 சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களும், சென்னையில் இந்த தங்கக் கட்டிகளை யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர்? சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னையில் எங்கு முகாமிட்டு தங்கி உள்ளனர்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து துபாய், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளில் இருந்து வந்த 2 விமானங்களில் ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details