வேலூர்:சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த 42,48,49 ஆகிய வார்டுக்களுக்கு உட்பட்ட 18 தெருக்களில் உள்ள 900 வீடுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊர் நாட்டாமை,செயலாளர்,பொருளாளர் ஆகியோரை நியமித்து கிராமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.
மேலும், இவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் ஆணையம் நடத்துவதுபோல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி ஊர் நாட்டாமை,செயலாளர்,பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுகிறதோ அதே நடைமுறையில் ஊர் நாட்டாமை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சின்னல்லாபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் 900 பேர் வாக்களித்தனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.