தூத்துக்குடி:கர்நாடகாவில் 13வது தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டி கன்றிவரா ஸ்டேடியத்தில் கடந்த ஜூலை 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சார்ந்த 42 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வீராங்கனை பொன் மோனிஷா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக பயிற்சியாளர் ஸ்டீபன் தலைமையில் 7 விளையாட்டு வீரர்கள் சென்றிருந்தனர். அதில் தூத்துக்குடி மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 1 தங்கம், 4 வெண்கலப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
அதில், T-38 பிரிவில் முகமது நசீர் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். F-55 பிரிவில் பொன் மோனிஷா வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். T-40 பிரிவில் பேபி ஷாலினி ஈட்டி எறிதலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும், T-20 பிரிவில் ஜாய் ஜெரிக்கா குண்டு எறிதலில் மூன்றாம் இடம் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட பாரா விளையாட்டு சங்கத் தலைவர் மருத்துவர் முகமது நசீர், செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் நீல ராஜன், துணைத் தலைவர் கான்ஸ்டன்ட், துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த தடகள போட்டியில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கங்களை வென்ற பொன் மோனிஷா கூறுகையில், "3 ஆண்டுகளாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஸ்டீபனுக்கும், இந்த தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்.
தற்போது தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கங்களை வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், இன்னும் சர்வதேச அளவில் நடைபெறக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தன் மாவட்டத்திலிருந்து 7 பேர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருப்பூரை திணறடித்த திண்டுக்கல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!