சிவகங்கை: மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட் தொடர்பாக, காரைக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவரும், பாஜக மாநில செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போதைய மத்திய பட்ஜெட் மூலம் பல நலத்திட்டங்களை நாம் தொடர்கிறோம். மகளிர் மேம்பாடு, தொழில் முனைவோர், தொழில் புரிவோருக்கு பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. கிராம மக்கள் மேம்பாடு, ரயில்வே திட்டங்களுக்கு அற்புதமான திட்டங்கள் என நாட்டு மக்களோடு இணைந்து செயல்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் குற்றச் செயல்கள்: கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மாநிலம் கொலைகார மாநிலமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக முதலமைச்சர் தவறிவிட்டார். அதற்கு முழுக்காரணம் மது, கஞ்சா போன்றவற்றின் புழக்கம் அதிகமாக இருப்பதுதான். கொலை போன்ற குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட அனைவரது முதல்நிலை அறிக்கையில் போதையினால் தான் குற்றம் நிகழ்ந்துள்ளது என உள்ளது. இந்த அரசால் இதைக்கூட அடக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் பெருகி வருகிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால், அரசை விட்டு வெளியேறுங்கள்.
அதிகார அத்துமீறல்: காரைக்குடி நகராட்சித் தலைவர் தன்னை சமீப காலமாக மேயர் என அழைத்துக் கொண்டு பிரச்னையை கிளப்பி வருகிறார். மாநகராட்சி என்று அறிவிக்கப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வராதவரை மேயர் என்று எப்படி கூறலாம்? போலியாக மேயர் என்று அழைத்துக் கொண்டு செயல்படுகிறார். அவருக்கு அமைச்சரும் உடந்தையாக உள்ளார். காரைக்குடியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்டடத்தின் மேற்புறம் நகராட்சி என்றும், கீழ்ப்பகுதியில் மாநகராட்சி என்றும் கூறப்பட்டுள்ளது. இது அதிகார அத்துமீறல்.
அதற்கு இந்த மாவட்டத்தின் ஆட்சியாளர்கள் உடந்தையாக உள்ளனர். மற்ற எந்த நகராட்சியிலும் இதுபோன்ற அத்துமீறல் இல்லை. எனவே, மேயர் என கூறிக்கொள்ளும் நகராட்சித் தலைவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தான் முழுப்பொறுப்பு. பட்ஜெட்டில் என்ன முதலீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிற்கு தேவையான விஷயங்கள் என்ன என்பது குறித்து இங்குள்ள எம்.பிக்கள் அமர்ந்து பேசி, அந்த திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பரிந்துரைக்க வேண்டும்.