மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் பகுதியில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்ததாக, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், அச்சிறுத்தை ஒரு பன்றியைக் கொன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுத்தை உலவிய பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டதில், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுத்தையின் புகைப்படம் பதிவாகி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், சித்தர்காடு பகுதியில் கழுத்துப் பகுதி குதறப்பட்டு இறந்து கிடந்த ஆட்டை, 70 சதவிகிதம் சிறுத்தை கொன்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என வனத்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5 தினங்களாக மயிலாடுதுறை மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில், அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்கள் மற்றும் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு, பழையகாவேரி ஆறுகளின் கரையோரப் பகுதிகளில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் 7 கூண்டுகள் வைக்கப்பட்டது.
ஆனால், சிறுத்தை குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காவிரி பாலத்தின் கீழ்ப்புறத்தில் சிறுத்தையின் 3 நாட்களுக்கு முந்தைய எச்சம் காணப்பட்டது. அதனை சேகரித்து உறுதிப்படுத்த, வண்டலூர் உயர் தொழில்நுட்ப வன உயிரின மையத்திற்கு வனத்துறையினர் அனுப்பி உள்ளனர். இதனிடையே, மயிலாடுதுறையில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் என்ற ஊரில், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சிறுத்தை உலவுவதாக காலை தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வினை மேற்கொண்டனர். தொடர்ந்து, மகிமலையாறு, வீரசோழன் ஆறு, நண்டலாறு ஆகியவற்றின் கரைப் பகுதிகளில் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என வனத்துறை அளித்த தகவலின் பேரில், மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், இன்றுடன் ஒன்பது நாட்களாகியும் சிறுத்தை கண்டறியப்படவில்லை. மேலும், பிடிக்க வைத்த கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.
இதற்கிடையே, காஞ்சிவாய், பேராவூர், கருப்பூர் ஆகிய ஊர்களில் நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில், சிறுத்தை காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததன் அடிப்படையில், சோதனை செய்ததில் சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டதால், தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அங்கு கூண்டுகள் நீர்வழிப்பாதைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வனப் பாதுகாவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுத்தை நகர்ந்து செல்லும் இடங்களாக கருதப்படும் இடங்களில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கு அல்லது தெற்கு பகுதிகள் வழியாக சிறுத்தை, ஆற்றின் கரைப் பகுதிகளில் முன்னேறிச் சென்று இருக்கக்கூடும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த 2ஆம் தேதி முதல் திரிந்து வந்த சிறுத்தை, கடந்த இரண்டு நாட்களாக குத்தாலம் தாலுகா காஞ்சிவாய், பேராவூர், கருப்பூர் பகுதிகளில் சுற்றி வந்த நிலையில், காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் இன்று (ஏப்.10) காலை ஆய்வு செய்தனர். மேலும், சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு செய்தனர்.
அதில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் சுற்றித் திரியும் சிறுத்தையின் கால் தடம், எச்சம் புகைப்படங்களை வெளியிட்ட வனத்துறை! - Mayiladuthurai Leopard Roaming