விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கத் திருவிழாவிற்கு அதிகாரிகள் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏழு ஆண்டுகளாக இக்கோயிலில் எந்த ஒரு திருவிழாவும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் கோயில் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன் கறுப்புக்கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கிராமப்புற மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத் தேர்தலானது தமிழகம் முழுவதும் காலை 6:00 மணிக்குத் தொடங்கியது.
இந்நிலையில், நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். ஆனால் பொதுமக்கள் ஒருவர் கூட வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வரவில்லை.
இதனால், அந்த வாக்குச்சாவடி மையங்களில் அரசு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். இதுபற்றி தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திண்டிவனம் துணை ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களை வாக்களிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்தனர். இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் இப்பகுதியில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க மரக்காணம் காவல் உதவி ஆய்வாளர் பாபு தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர், தேர்தல் முடிந்த உடனேயே அமைதிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க வரத் தொடங்கினர்.
ஏற்கனவே இந்த வாக்குச்சாவடி பதற்றமான வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டதால், அங்கு போலீசாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். மேலும், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்களிக்கக் குவிந்தனர். கோயில் திருவிழாவை நடத்த முடியவில்லை என்ற மன வருத்தம் காரணமாகவே தேர்தலை புறக்கணித்ததாகவும் இப்போது அதிகாரிகள் உறுதி அளித்தால் வாக்களிக்க வந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணிக்குள் வந்த அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதால் மேற்கண்ட வாக்குச்சாவடியில் மக்கள் டோக்கன் பெற்று வரிசையில் நின்று இரவு 8.30 மணி வரை வாக்களித்தனர்.
இதையும் படிங்க:நரசிங்கம்பாளையம் வாக்குச்சாவடியில் விசிக - பாஜகவினர் மோதல்.. 3 இளைஞர்கள் படுகாயம்! - Lok Sabha Election 2024