தென்காசி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மேடையில் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், குற்றாலத்தில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைக்காக அவர் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் சாட்டை துரைமுருகன் வீடு கட்டிக் கொண்டுள்ளார். இந்நிலையில், அதனைப் பார்த்துவிட்டு குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது இன்று (ஜூலை 11) திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், பிரபல யூடியுபருமான சாட்டை துரைமுருகன் வீராணம் பகுதியில் சாட்டை துரைமுருகன் வீடு கட்டிக் கொண்டுள்ளார் எனக் கூறப்பட்டு வருகிறது. அதனைப் பார்க்க வந்துவிட்டு பின்பு இரவு நேரத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு தென்காசி அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இன்று திடீரென சாட்டை துரைமுருகன் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து சென்றனர். குற்றாலத்தில் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, இவர் மீது 'குண்டாஸ்' வழக்கும் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. அதிரடியாக அரசு குறித்தும் அரசியல் பிரமுகர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை யூடியுபில் பேசுவார். குறிப்பாக, அரசு நிர்வாகம் மீது நடைபெறும் முறைகேடு குறித்து பகிரங்கமாக பேசிவருகிறார்.