தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மூன்று புதிய குழப்பமான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது” - எம்பி வில்சன் கருத்து! - MP WIlson - MP WILSON

Wilson MP: சட்ட ஆணையத்தை ஆலோசிக்காமல் அவசரகதியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று திமுக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

எம்பி வில்சன் புகைப்படம்
எம்பி வில்சன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 4:58 PM IST

சென்னை: மத்திய அரசால் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) ஆகிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று (சனிக்கிழமை) திமுக சட்டத்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அமைச்சர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், போராட்டத்தில் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞமான எம்பி வில்சன் பேசியதாவது, “இந்தியா முழுவதும் இந்த சட்ட திருத்தம் பிரச்னையை கொண்டுவரும். மருத்துவர்களுக்கான சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. மருத்துவ தொழிலையும் இந்த சட்டம் பாதித்துள்ளது. சட்ட அமைச்சரிடம் எடுத்துக்கூறியும், ஜூலை 1ஆம் தேதி முதல் சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

புது சட்டத்தில் 95 சதவிகிதம் பழைய சட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தெளிவை கொண்டு வருகிறோம் என்று கூறி 3 புதிய குழப்பமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த 3 சட்டங்களை திரும்பப் பெறுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய நிலையில், இந்த சட்டங்களை செயல்படவிட்டால் நாடு முழுவதும் கடும் பிரச்னைகள் எழும். ஒன்றிய அரசு இந்த சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

தேர்தலில் பெரும்பான்மையாக வருவோம் என பாஜக எண்ணிய நிலையில், மைனாரிட்டி ஆட்சி அமைத்துள்ளது. நீட் தேர்வுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அனைவரும் சிரித்தனர். சிறந்த தேர்வு என்று கூறிய நீட் தேர்வு, தற்போது மோசமான தேர்வாக உள்ளது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவோம். சட்ட ஆணையத்தை ஆலோசிக்காமல் அவசரகதியில் மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு; திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details