சென்னை:வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கி வருகிறது. அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளம் உள்ள நிலையில், 1975ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இங்கிருந்து புவி அறிவியல் செயற்கைக்கோள் ஆரியபட்டா என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் ராக்கெட்டுகள் இங்கிருந்து ஏவப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், 36 வெளிநாடுகளுக்குச் சொந்தமான 381 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ஏவுதளம் அமையவுள்ளது. பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில், ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரிபொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில், புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. நிலவியல் ரீதியாக குலசேகரன்பட்டினம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதால், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது பல சாதகங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் விண்கலன்கள், முதலில் கிழக்கு பகுதி நோக்கி ஏவப்பட்டு, பின் தெற்கு நோக்கி திரும்பும்.
இதன் காரணமாக அதிகப்படியான எரிபொருள் செலவாகும். ஆனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகளை தெற்கு நோக்கி ஏவ முடியும். ராக்கெட்டின் பயண நேரம் அல்லது விண்வெளியில் இலக்கை ராக்கெட் அடைவதற்கான நேரம் குறையும். மேலும், எரிபொருள் செலவும் குறையும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத் திட்டம் வருவதன் மூலம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே, திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மத்திய அரசு, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனைத்து வழிகளிலும் குலசேகரப்பட்டினம் சிறந்த இடம் என தேர்வு செய்து, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்தில் அமைக்க தீர்மானித்தனர்.
இதற்காக தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு பிரதமர் மோடி பாராட்டுகளையும் தெரிவித்து இருந்ததாக கனிமொழி எம்பி அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, “2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்-க்கு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
அதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, அக்கடிதத்தைக் குறிப்பிட்டு, ஏவுதளம் வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை வைத்திருந்தார். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கனிமொழி கடிதம் எழுதினார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி, மத்திய அரசு ஏவுதளம் அமைத்திட ஒப்புதல் வழங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, அப்பகுதியில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஆழ்கடலை ஆராயப்போகும் சமுத்ரயான்: சந்திரயான் , ககன்யான் வரிசையில் அடுத்த முயற்சி