தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் எழுதிய நூல்களை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள்? - துரை வைகோ பதில் என்ன? - PERIYAR BOOKS

பெரியார் எழுதிய நூல்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும் பொழுது அதை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு திருச்சி எம்பி துரை வைகோ பதில் அளித்துள்ளார்.

சீமான் கோப்புப்படம், துரை வைகோ பேட்டி
சீமான் கோப்புப்படம், துரை வைகோ பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 4:07 PM IST

திருச்சி: திருச்சி எம்பி துரை வைகோ தனது அலுவலகத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், '' உழவுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினாலும், உண்மையிலேயே விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்றால் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து விவசாயிகள் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி போடப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக விவசாயத்தை அழித்து வரும் காட்டுப்பன்றி போன்ற உயிரினங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழக விவசாயிகள் சார்பாகவும், மதிமுக சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி, பெண்கள் உரிமை, எல்லாருக்கும் எல்லாம் என்ற அனைத்தையும் தந்தை பெரியார் கொண்டு வந்ததால் தான் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

சீமான் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள்

தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் என அனைவரும் தற்போது முன்னேறி உள்ளார்கள் என்றால் அதற்கு பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை காரணம். தமிழ் தேசியம் தவறான விஷயம் இல்லை, ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது வேதனை. தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்கள் இதனை கண்டித்துள்ளனர், 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதியப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் இப்படி செய்வது தவறில்லை. அதை அவர்கள் தான் செய்வார்கள் அவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். நாம் தமிழர் இயக்கத்தை பொருத்தவரை அவர்கள் இதை செய்வது வேதனையாக உள்ளது. சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்திற்கும் இது தகுந்தது அல்ல; தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

அரசுடமையாக்குவோம்

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் இவ்வளவு நல்ல கருத்துக்களை கூறியுள்ள பெரியாரின் நூல்களை அரசு ஏன் பொதுவுடமை ஆக்க மறுக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு துரை வைகோ, '' பெரியாரின் நூல்களை அரசுடைமை ஆக்க மாட்டோம் என யார் சொன்னார்கள்? அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை. தந்தை பெரியாருக்கு உண்டான மரியாதையை தமிழக அரசு கொடுத்து வருகிறது. வருடா வருடம் அவருக்கான மரியாதையை திராவிட இயக்கங்கள் செய்து வருகிறது'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர், பெரியார் எழுதிய நூல்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும் பொழுது அதை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள் என்ற போது, தந்தை பெரியாருடையதை அரசுடமையாக்குவோம் என நீங்கள் சொல்லுங்கள்; நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். முதலமைச்சரோ, இந்த அரசோ மறுக்கப் போவதில்லை.

பெரியாரைக் கொச்சைப்படுத்துவதில் சீமானுக்கும், அண்ணாமலைக்கும் போட்டி இருக்கிறது. தந்தை பெரியார் இல்லை என்றால், அண்ணாமலை ஐபிஎஸ் ஆகவே ஆகியிருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக நீதி'' என அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details