கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாகர்கோயிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்தப் பேருந்தானது, இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பாலம் கட்டுமான பணி தொடர்பான எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாததால் தடுப்பு கட்டையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.