வாழை மரங்கள் சேதமடைந்துள்ள காட்சி (Video credits to ETV Bharat tamil) ஈரோடு:சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இதில் குவிண்டால், நாட்டு நேந்திரன், செவ்வாழை, கதலி, தேன் வாழை உள்ளிட்ட ரகங்கள் அடங்கும். தற்போது, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சூறாவளியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்று வட்டார கிராமங்களில் வீசிய சூறாவளிக் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அறுவடைக்குத் தயாராக இருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு, ரூ.3 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது.
இன்று (மே 8) அதிகாலை மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வாழை பயிரிட்டு இருந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு, சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய விவசாயிகள், "இரவும், பகலுமாகப் பாடுபட்டு வளர்த்த வாழை மரங்கள் அனைத்தும் ஒரே நாளில் அடியோடு சாய்ந்து சேதமானதை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்கி காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், கடன் பெற்று விவசாயம் செய்து வரும் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் இப்பகுதி விவசாயிகள், தமிழ்நாடு அரசு சேதமான வாழை மரங்களைக் கணக்கெடுத்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகையானது (ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம்) சாய்ந்த வாழை மரங்களை விவசாய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதற்கே போதாது. ஆகையால் கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வாழையைப் பொறுத்தவரைக் காற்றால் மட்டுமே சேதம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பூமியை குளிரவைக்க வரும் கோடை மழை! அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு