திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நேற்று (ஏப்.19) நடைபெற்றது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், மற்றும் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில், 16 லட்சத்து 53 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக ஆயிரத்து 810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்றது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி ஆறு மணிக்குள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டது. இறுதியாக திருநெல்வேலி தொகுதியில் 70.46% வாக்குகள் பதிவானதாக சென்னை தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வ.எண் | தொகுதிகளின் பெயர் | வாக்குகளின் எண்ணிக்கை (%) |
1. | திருநெல்வேலி | 62.28 |
2. | ராதாபுரம் | 65.41 |
3. | பாளையங்கோட்டை | 56.62 |
4. | நாங்குநேரி | 62.51 |
5. | அம்பாசமுத்திரம் | 65.55 |
6. | ஆலங்குளம் | 73.10 |