ஈரோடு: நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது பவானிசாகர் அணைக்கட்டிலிருந்து விவசாயத்துக்கு வண்டல் மண் எடுக்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவுக்கு பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி வலியுறுத்தியுள்ளார்.
பவானிசாகர் அணைப்பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயத்துக்கு எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவுக்கு பவானிசாகர் எம்எல்ஏ ஏ.பண்ணாரி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், "ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீர்வரத்தாக மேட்டுப்பாளையம் பவானி ஆறும், மாயாறும் உள்ளது.
இந்தாண்டு நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை பொய்த்துவிட்டதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்து விட்டது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 45 அடியாக சரிந்துவிட்டது. இதனால் இரண்டாம் போக பாசதனத்துக்கு தண்ணீர் திறப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் சரிந்ததால் பவானிசாகர் வனத்தையொட்டியுள்ள பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி திட்டு திட்டாக மலைக்குன்று போல காட்சியளிக்கிறது.