சென்னை:ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
அதாவது, வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் தொடர் கனமழை பெய்தது. இதனால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் புகுந்து கடலாகக் காட்சியளித்தது. அதனால், மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2000 மற்றும் பாதிப்புக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கி, இன்று முதல் நிவாரண நிதி வழங்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு மாத சம்பளம் சுமார் ரூ.2,05,000 எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "உடுத்திருக்கும் உடையைத் தவிர வேறு ஏதும் இல்லை" வெள்ளம் வடிந்த பின்னும் வடியாத கண்ணீர்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் உருவான 'ஃபெஞ்சல் புயல்' காரணமாகப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அறிக்கை (ETV Bharat Tamil Nadu) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.5) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா.முருகானந்ததிடம் வழங்கினார்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.