சென்னை:நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலாக கூட்டணி கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதன்படி, வெற்றி வேட்பாளர்கள் வாழ்த்து பெற திமுக தலைமை அலுவலகமான, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். முன்னதாக, அண்ணா அறிவாலயம் செல்லும் வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், க.செல்வம், கதிர் ஆனந்த், ஆ.மணி, சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன், மலையரசன், டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, அருண் நேரு, முரசொலி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, சுதா, கோபிநாத், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் ஆகியோரும் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.