தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் புதிய 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்! - 4 வழிப் பாலம்

M.K.Stalin: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ரூ.621 கோடி மதிப்பிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

four lane high level road in chennai
சென்னையில் ரூ.621 கோடி மதிப்பில் புதிய 4 வழி பாலம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 8:49 AM IST

சென்னை: சென்னையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலை, சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. அண்ணா சாலையில் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமை மையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள், வங்கித் தலைமையகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவும், நெரிசல் மிகுந்தும் காணப்படும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரங்களில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம். இந்த பகுதியில் அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிக நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதிலும், குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடிநகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே, இப்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராய சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் SIET கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு,

மேலும், சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில், சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்டச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அண்ணா சாலையின் கீழே சென்னை மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதை செல்வதால் இதை வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம், சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது.

மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை (piling technique) எடுக்க முடியாத சூழலும் இருந்தது. எனவே ஆழம் குறைந்த அடித்தளம் (shallow Foundation) மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும்திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டுவடிவமைப்பது சாத்தியமற்றானது.

இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், சென்னை ஐஐடி வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினாலான முன்வார்க்கப்பட்ட (prefabricated) கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை ரூ.621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது.

மேலும் இப்பணி (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கிலோ மீட்டர் தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம்.

மேலும் கட்டுமானம் நிறைவடையும் போது, சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூகவலைதளப் பக்கத்தில், "சென்னையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் மேம்பாலங்களைக் கட்டிய வரலாறு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கே உரியது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் ஏமாற்றுவதாக ஜாக்டோ ஜியோ குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details