சேலம்: சேலம் மாவட்டம் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக உற்பத்தித்திறன் பெறும் விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் சிறப்பு ரொக்கப் பரிசும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கிராமம் சின்னப்பில்லுக்குறிச்சியைச் சேர்ந்த சித்தன் மகன் சி.பாலமுருகன் என்ற விவசாயி, 2022-23 ஆம் ஆண்டிற்கான இவ்விருதைப் பெற்றார். இவ்விவசாயி வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று அதனடிப்படையில் திருந்திய நெல் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தனது வயலில் CR-1009 என்ற நெல் ரகத்தைப் பயிரிட்டு, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கொண்டு தரமான 'CR-1009 ரக நெல் சான்று' விதைகளை உயிர் உரங்கள் மற்றும் உயிரின பூச்சிக்கொல்லிகள் விதை நேர்த்திகளுக்கு உட்படுத்தி, மேட்டுப்பாத்தி நாற்றாங்காலில் விதைப்பு செய்து 16 நாட்கள் வரை நாற்றாங்காலைப் பராமரித்துள்ளார்.
தனது நடவு வயலையும் நன்கு உழவு செய்து பரிந்துரைக்கப்பட்ட தொழு உரம். பசுந்தாள் மற்றும் பசுந்தழை பசுந் உரங்களை நிலத்தில் இட்டு, மடக்கி உழுது. நீர் பாய்ச்சி நடவு வயலை நன்கு தயார் செய்துள்ளார். தொடர்ந்து. மேட்டுப்பாத்தியில் நன்கு வளர்க்கப்பட்ட, 16 நாட்கள் வயது கொண்ட திரட்சியான நெல் நாற்றுகளைத் தேர்வு செய்து, அவற்றின் வேர்ப்பகுதியை, உயிர் உரக் கரைசலில் நன்கு நனைத்து, அவற்றை நெல் நடவு மார்க்கர் கருவி உதவியுடன் 225X22.5 செ.மீ இடைவெளியில் ஒற்றை நாற்று முறையில், வரிசையாக நடவு செய்துள்ளார். நடவு செய்யப்பட்ட நெல் பயிருக்கு, பரிந்துரைக்கப்பட்ட ஜிங்க் சல்பேட் நெல் நுண்ணூட்டம் மற்றும் ராசயன உரங்கள் ஆகியவற்றை இட்டுள்ளார்.