சென்னை:மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் ரூ.37,907.21 கோடி வழங்குமாறு கோரிய நிலையில், மத்திய அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சென்னை மற்றும் வடதமிழ்நாட்டின் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதுவரை கண்டிராத வெள்ளத்தைச் சந்தித்தன. இந்த இரு வெள்ளத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கியது.
இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணமாக சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடியும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடியும் என மொத்தம் ரூ.37,907.21 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியது. அதற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 950 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது.
இந்நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, தண்ணீருக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதன்படி, 18 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட கர்நாடக அரசுக்கு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாயும், 38 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட தமிழ்நாடு அரசுக்கு வெறும் 275 கோடி ரூபாயையும் நிவாரணமாக மத்திய அரசு தற்போது ஒதுக்கி உள்ளது.
இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் வெள்ள பாதிப்பிற்கு ரூ.275 கோடி ஒதுக்கீடு.. தமிழ்நாடு மீது ஏன் இந்த தீராத வன்மம் என சு.வெங்கடேசன் விமர்சனம்! - Su Venkatesan Criticize Relief Fund