சென்னை: 'தமிழ்த்தாய் வாழ்த்து' விவகாரத்தை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆளுநரும், ஆளுங்கட்சியும்:தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. உயர்கல்வித்துறைக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல் போக்கு வெளிப்படையாக நடைபெற்று வந்தது.
பல்கலைக்கழகமும், துணைவேந்தர் நியமனமும்:குறிப்பாக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் நியமனம் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு, உயர்கல்வித்துறை அமைச்சராக புதிதாக கோவி.செழியன் நியமிக்கப்பட்டார்.
திமுக அரசை பாராட்டிய ஆளுநர்:கடந்த வாரம் சென்னையில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது என தமிழ்நாடு ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்தார். இதனால் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், திடீரென கடந்த வாரம் சென்னையில் ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில், தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் விடுபட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
பட்டமளிப்பு விழா புறக்கணிக்கும் அமைச்சர்:புதிய உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் பொறுப்பேற்ற பிறகு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருக்காது துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தை தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை கோவி செழியன் புறக்கணித்தார்.