திருவாரூர்: திருவாரூர், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் பகுதியில் கடந்த 50 ஆண்டு காலமாக ரயில்வே கேட் இயங்கி வருகிறது. காரைக்காலிலிருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து செல்லும் விரைவு ரயில், அதே போன்று காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் என 28 சரக்கு ரயில் என நாள்தோறும் 42 ரயில்கள் சென்று வருகிறது.
இதன் காரணமாக நீடாமங்கலம் ரயில்வே கேட் நாள் ஒன்றுக்கு 42 முறை மூடப்படுகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்வே கேட்டில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.
மேலும், இந்த ரயில்வே கேட் வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதியில் இருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த ஊரைக் கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வந்தனர்.