சென்னை: நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, சென்னையில் உள்ள வீட்டுமனை பட்டாக்கள் சார்ந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று திமுக சார்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த ஜூலை மாதம் சென்னை மாதவரம் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2,124 திட்டப் பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவும், சோழிங்கநல்லூரில் 2,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் உள்ள வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மாதவரம், பொன்னேரி, திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த 2,099 பேரில் 250 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “வடசென்னையின் முகத்தை மாற்றப்போகும் திட்டம் வடசென்னை வளர்ச்சித் திட்டம். சென்னையில் மொத்தமாக இதுவரை 28,848 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பகுதியில் மட்டும் 7 ஆயிரம் பட்டாக்கள் தயாராக உள்ளது. தற்போது சுமார் 2 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் அதிக வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசு பெற்றுள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டத்தின் பயனாளிகள் மட்டுமல்ல, நீங்கள் இந்த திட்டங்களில் பங்கேற்பாளர்கள்.
பட்டா பெற்ற உங்களுக்கு இன்றைய நாள் முக்கியமான நாள். பட்டா வேண்டும் என்ற பல வருடக் கனவு நனவாகி இருக்கிறது. நாளொன்றுக்கு 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர்” என்றார். இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதனிடையே, பட்டா வழங்கிவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த பெண்கள், தங்களுக்கு முறையாக பட்டா வழங்கவில்லை என்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இதனை அறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காரை மறித்த பெண்களை அழைத்து, அவர்களிடம் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் மனுக்களை வாங்கி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதன்முறையாக தீர்மானம்!