சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
7 முறை பேச்சுவார்த்தை:அப்போது அவர் கூறுகையில், "சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். 7 முறை தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளது.
இந்த போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். மூன்று அமைச்சர்கள் சேர்ந்து 10 முதல் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
முதலில், நிறுவனத்திடம் பேசினோம், பின் சிஐடியு மற்றும் அது சார்ந்த நபர்களிடம் பேசி அவர்கள் கருத்துகளைப் பெற்றோம். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் பேசினோம். சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
இந்த சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் எதுவும் செய்ய முடியாது என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு கோரிக்கைக்காக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் திருமணமான இளைஞர்கள் பலர் இங்கு பணிபுரிகிறார்கள்.