சென்னை:பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசிற்கு நிகரான ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் (பிப்.15) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், அதனைத் தொடர்ந்து பிப்.26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.
இதற்கான ஆயத்த பணியைத் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் இன்று (பிப்.13) அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ”கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1.7.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதே போல் விரைவில் நிதி நிலைமை சீர் அடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது.
எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பத்திரிகை செய்தியினை ஜாக்டோ ஜியோ முற்றிலுமாக நிராகரிக்கிறது என அறிவித்துள்ளது. மேலும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தவுள்ள வேலைநிறுத்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகள் தொடர்பாக அரசின் முடிவினை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:தஞ்சாவூரில் அறிவகமாக மாறிய காவல் நிலையம்! இன்ஸ்பெக்டரின் புது முயற்சிக்குக் குவியும் பாராட்டு..