கன்னியாகுமரி: அறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக, அமுமுக, அதிமுக ஓபிஎஸ் அணி என பல்வேறு கட்சியினரும் மரியாதை செலுத்தினர். அந்தவகையில், திமுகவைச் சேர்ந்த நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவகுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நாகர்கோவில் மாவட்ட தலைமை திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து வடசேரியில் அமைந்து உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவர் கட்டிக்காத்த கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் எந்த சக்திகளையும் இந்த மண்ணில் வளர விடமாட்டோம் என்கிற உறுதியை தமிழகம் முழுவதும் திமுகவினர் எடுத்துள்ளனர். அதற்கேற்ப, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஆட்சி, ஜனநாயகத்தை பாதுகாக்கவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பறி போகி விடாதபடி அனைவரும் சூளுரைப்போம்" என்று கூறினார்.