கும்பகோணம்: கும்பகோணம் மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், பிஎஸ் 6 (BS6) ரக 15 மாநகரப் பேருந்துகள் மற்றும் 8 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகளின் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, புதிய பேருந்தின் சேவைகளை அமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழக முதலமைச்சர் 7 ஆயிரத்து 200 புதிய பேருந்துகள் வாங்கவும், ஆயிரத்து 500 பழைய பேருந்துகளுக்கு புதிய கூண்டுகள் அமைத்து புதுப்பிக்கவும், 500 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கிடவும் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில், இதுவரை 800 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும், முதற்கட்டமாக 100 புதிய மின்சார பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 30 பேருந்துகள் அடுத்த வாரம் இயக்கப்பட உள்ளது.
மகளிர் விடியல் பயணம் சிறப்பான முறையில் செயல்படுகிறது. அதற்காக 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்குவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மாதந்தோறும் 1ஆம் தேதி சம்பளம் பெற முடிகிறது. இந்த நிலை அண்டை மாநிலங்களில் கூட இல்லை" எனக் கூறினார்.