கரூர்:திமுகவில், கரூர் மாவட்ட செயலாளராகவும் தமிழக அமைச்சரவையில் மூன்று துறைகளை தன் வசம் வைத்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை கைதுக்கு பிறகு, சிறையிலிருந்து வெளி வந்து மீண்டும் அமைச்சரவையில், அதே துறைகளை திமுக அரசு வழங்கி உள்ளது.
அதேபோல, கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை மீண்டும் முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 8ம் தேதி நியமித்தார். கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள திமுக துணை அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி மிக தீவிரமாக மீண்டும் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், இன்று கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் திமுக மாணவரணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக மாநில மாணவரணி தலைவர் ரா. ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் எஸ்.மோகன், பூவை ஜெரால்டு, துணைச் செயலாளர்கள் மண்ணை சோழராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவர் நலன் குறித்த திட்டங்கள்: கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, '' திமுக இளைஞரணியுடன் இணைந்து திமுக மாணவர் அணி முன்னெடுக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவ சமுதாயத்திற்கு அரணாக விளங்குகிறது. தமிழக முதல்வர் மாணவர்கள் நலனில், அக்கறையுடன் செயல்படுத்தும் சாதனை திட்டங்களில், குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தும் காலை சிற்றுண்டி உணவு திட்டம் துவங்கி நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம் என 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு மாணவர் நலனை காத்து வருகிறது'' என்றார்.
முதலமைச்சர் தனிக்கவனம்:தொடர்ந்து அவர், தமிழகத்தில் வேறு எந்த துறைக்கும் தமிழக முதலமைச்சர் இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து கவனம் செலுத்தியது இல்லை. காரணம் மாணவர்களின் நலன், எதிர்காலம் கருதி, தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் இந்தியாவில், தமிழ்நாடு கல்வியில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
மேலும், இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநில மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள வார்டுகளில் படித்த மாணவர்கள், திமுகவின் மாணவர் அணியில் இணைந்து பணியாற்றும் வகையில் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இதனை தலைமை ஒப்புதல் வழங்கி திமுகவில் மாணவர் அணியில் களப்பணியாற்றிட, வாய்ப்பு வழங்க வேண்டும்'' என இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.
அமலாக்கத்துறை வழக்கில் 471 நாட்கள் சிறை சென்று திரும்பி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் களத்துக்கு வந்து கட்சிப் பணிகளை துவங்கியிருப்பது திமுகவில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும், நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்டறிந்து, திராவிட முன்னேற்ற கழக மாணவர் அமைப்பில் இணைத்திடவும் திமுக மாணவர் அணிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாணவ அணியினர் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்