விழுப்புரம்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார்-யை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் ஜெயபுரம், நள்ளிகொண்டபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “இந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவை யார் ஆள வேண்டும், யார் ஆள கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். என்ன காரணத்துக்காக ஆளக்கூடாது, என்ன காரணத்துக்காக ஆள வேண்டும் என்பதற்காக நடைபெறுகிற தேர்தல். சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய ஆதரவைப் பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
அவர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காகப் பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறார். இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் ரூபாய் ஆயிரம் கொடுக்கப்படுகிறது.
முதலமைச்சர் சொன்னதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் வழங்கினார். அதை தொடர்ந்து நம்முடைய முதலமைச்சர் குறுகிய காலத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளார். மறுபுறம் இந்தியா விவசாயிகள் டெல்லிக்கு சென்று வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.