சென்னை :சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2023 – 2024ம் ஆண்டில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 97 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 9 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 9 மாணவர்கள் என ஆக மொத்தம் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை எல்லாம் புனரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது.
அந்த வகையில், கடந்தாண்டு அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பயிற்சி முடித்த 115 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
2,000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தின் வெற்றியாக இதனை கருதுகிறோம். அனைத்திலும் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் காண வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி வந்த போராட்டத்தின் வெற்றியாக திராவிட மாடல் அரசில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 11 பெண்கள் அதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஓதுவார் பயிற்சியினை முடித்த 9 நபர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி முடித்த 9 நபர்கள் உள்பட 115 நபர்களுக்கும் துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து நீங்கள் அனைவரும் தேவாரம், மங்கல இசை முழங்க அனைத்து திருக்கோயில்களிலும் உங்களுடைய பணியை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்து சமய அறநிலையத்துறையை பொருத்த வரையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 29 அர்ச்சகர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 11 திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 10 கல்லூரிகளில் 12,212 மாணவ, மாணவியரும் 25 பள்ளிகளில் 10,736 மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர். அம்மாணவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திடும் வகையில், பள்ளிகளில் ரூ.107 கோடி மதிப்பீட்டில் 167 பணிகளும், கல்லூரிகளில் ரூ.83.33 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க :மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்.. நோயாளிகள் கடும் அவதி.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
அர்ச்சகர் நலன் காக்கும் அரசு :பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுத் திட்டம் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.