புதுக்கோட்டை: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் இன்று (மே 12) திறந்து வைக்கப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு ஒரு கட்சியில் தலைவர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிமை உண்டு.
அவர்தான் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர். அவர் கட்சிக்காக தேர்தல் பணியாற்ற வேண்டியது அவசியம். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணி என்பது தேவையானது. எனவே, அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி தேர்தல் பணியாற்ற அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.
இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "இந்தியா கூட்டணியை அவர் தாக்கி பேசுவதே, பாஜக கூட்டணி தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் 10 தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான்.
பாரதிய ஜனதா கூட்டணியில் தேர்தல் ஆணையமும் உள்ளது. தேர்தல் முடிந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்துள்ளார்.