விழுப்புரம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை மற்றும் வெளிநாடு நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே தொடங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் பொன்முடி உள்ளே வருகிறார். அப்போது கட்சிக்காரர்கள் அமைச்சர் வருகிறார் சற்று பேச்சை நிறுத்துங்கள் என கூறினர். ஆனால் இதனைக் கண்டு கொள்ளாத அமைச்சர் மஸ்தான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் கடுப்பாகச் சிறிது நேரம் அமர்ந்து இருந்த அமைச்சர் பொன்முடி பொறுமையை இழந்து அமைச்சர் மஸ்தான் பேசி முடிக்கும் முன்பே மைக்கை பிடுங்கினார். பிடுங்கியது மட்டுமல்லாது அமைச்சர் மஸ்தானை அமைச்சர் பொன்முடி கடுமையாகச் சாடினார். அமைச்சர் மஸ்தான் நான் இன்னும் பேசி முடிக்கவில்லை எனக் கூற அதற்கு அமைச்சர் பொன்முடி பேசாமல் உட்காருங்கள் எனக் கூறினார்.