ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(பிப்.28) நடைபெற்றது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வரும் 1ஆம் தேதி அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு வலியுறுத்தி விவசாயிகள் முன்னெடுக்க உள்ள போராட்டம் குறித்து விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திட்ட அலுவலர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அனைத்து பணிகள் முடிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டத்திலிருந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டம் காலதாமதமாகுவதற்கு ஆரம்பக் கட்ட பணிகள் தான் காரணமாக இருந்தது. இது விவசாயிகள் மத்தியில் பேசி தற்போது தீர்வு காணப்பட்டது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் 1045 குளங்களுக்குத் தண்ணீர் செல்வது குறித்து சோதனை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. வரும் 1ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் குறித்துத் தகவலறிந்து உண்மை நிலவரம் தொடர்பாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
400 கன அடி தண்ணீர் வரும் போது தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். தண்ணீர் வரத்துக் காரணமாகத் தான் திட்டம் தள்ளிப் போடப்படுகிறது. தற்போது 160 கன அடி தண்ணீர் தான் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டும் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றார்.