சென்னை: சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆவின் நிலையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் 10 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் கணினிமயமாக்கப்படும் பணி தொடங்கி உள்ளது.
மாவட்ட ஒன்றியம் மற்றும் DR அலுவலகத்தில் தனி மின்னஞ்சல் துவங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கங்களை நிகர லாபம், கொள்ளளவு சார்ந்து நான்கு பிரிவுகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைவான பால் உற்பத்தி கொடுக்கும் சங்கங்களுக்கு தனிக்கவனம் கொடுத்து ஊக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த தீவிர பயிற்சி தர முடிவும். சங்க உறுப்பினர்களுக்கு சலுகைகள், கடன், இன்சூரன்ஸ், முழு பயணம் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் புதிய கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு 300 இடங்களில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் பல இடங்களில் தொடங்கப்படும். அதன் மூலமாக துறை சார்ந்த பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நேற்று நமது ஒன்றியங்கள் மூலம் 36,50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. உள்ளூரிலே விற்பனை செய்வது இன்னும் கணிசமான தொகையை தருகிறது.
பால் கையாளும் திறன் அதிகரித்து இருக்கிறது. தனியார் பால் நிறுவனம் என்ன அறிவித்தாலும், ஆவினின் செயல்பாடு அதிகமாகவே இருக்கிறது. ஆவின் பால், உற்பத்தி, கொள்முதல் அதிகமாகி உள்ளது. பால் வரத்து அதிகமானால் ஏற்றுமதி செய்யப்படும்.