சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் இந்த விழாவில் அவர் ஆராய்ச்சி மலரை வெளியிட்டும், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தவர்களுக்கு இளம் அறிவியலாளர் விருதுகளையும் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நாள் இரண்டாவது ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு பிரத்தியேகமான மருத்துவமனை அமைக்கபட உள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மருத்துவக் கல்லூரிகளில் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதற்கென பல்கலைக்கழகம் சார்ப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் மருத்துவத்துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உலக ஆராய்ச்சி நாளில் 23 கட்டுரைகள் வரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தாண்டு 1500 கட்டுரைகள் வரப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவத்தின் மாற்றத்திற்கு பெரிய அளவிலான உதவியாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், “ இந்த ஆராய்ச்சி தினத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை தந்துள்ளனர்.
செயற்கை தொழில்நுட்பம் மக்களின் உடல்நலனை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சுகாதார சேவைகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு சாத்தியக் கூறுகளை கொண்டுள்ளது. நோய்களை கண்டறிதல், மேம்பட்ட சிகிச்சை திட்டம், ரோபோடிக் சிகிச்சை திட்டங்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தாண்டு முதல் மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதியாக ரூ.1 கோடி உயரத்தி வழங்கப்பட உள்ளது. மேலும் நோயாளிகளின் உரிமைகள் என்ற வகையில் ஆராய்ச்சி முடிவுகளை பதிவு செய்தல் திட்டமும் துவக்கப்பட உள்ளது. மேலும் பருவநிலை மாற்றம் மனித குலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட இருக்கிறது” என்றார்.
அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் இது தொடர்பாக முடிவெடுப்பார். தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சட்டபோராட்டத்தை சந்தித்த பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது சட்டத்துறைக்கு நன்றி” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்