தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு...22 ஆண்டுகளுக்குப் பின் வழக்கில் இருந்து விடுதலையான அமைச்சர்! - MINISTER MA SUBRAMANIAN

டெண்டர் விவகாரத்தில் அதிமுக மாநகராட்சி உறுப்பினர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் (கோப்புப்படம்)
அமைச்சர் மா. சுப்பிரமணியன் (கோப்புப்படம்) (credit - @Subramanian_ma X Account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

சென்னை: கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சனையை எழுப்பியது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கியதில், அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டன. (சம்பவம் நடைபெறும் போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள்).

இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை - சட்ட திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு!

அதில், கலகம் செய்யும் நோக்கில் சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோதமாக ஒருவரை தடுத்து வைத்தால், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடந்து வந்தது.

காவல்துறை தரப்பில் 70 மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஜெயவேல் இன்று (ஜன 10) தீர்ப்பு வழங்கினார்.

அதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என உத்தரவிட்டு அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details