தென்காசி:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை புரிந்து சங்கரநாராயணன் கோயில் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 10 வட்டாரங்கள் மற்றும் 374 பள்ளிகளில் பணிபுரியும் 977 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ரூபாய் 124.37 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், “நீங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் சொல்லமலே நாங்கள் செய்வோம். தமிழக அரசிடம் பணம் இல்லை. மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு நாங்கள் படாத பாடு படுகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட பெண்கள் வாயை திறப்பதில்லை.