தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி கனமழை; முகாமில் மக்கள்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை.. அமைச்சர் உறுதி! - Heavy rain in Nilgiris - HEAVY RAIN IN NILGIRIS

Nilgiris heavy rain: நீலகிரி மாவட்டம், பொன்னானி மற்றும் அம்பமுலா பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் ராமச்சந்திரன்
நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 9:19 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அதி கனமழை பெய்து வருவதால், ஓடைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பொன்னானி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனிடையே, முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டறிந்ததோடு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் கௌஷிக், நெல்லியாலம் நகராட்சி தலைவர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஜூன் 28 அன்று ஒரே நாளில் 28 செ.மீ மழை பெய்ததில், சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் வசித்து வந்த மக்களில் பொன்னானி மற்றும் அம்பமுலா பகுதிகளில் உள்ள 41 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்றிரவு 12 பேர் அழைத்து வரப்பட்டனர். அந்தவகையில், இந்த முகாமில் உள்ள மொத்தம் 53 நபர்களுக்குத் தேவையான பொருட்களை முதலமைச்சர் உத்தரவின் படி, அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு நேரில் சென்று பார்க்கும்படி உத்தரவிட்டார்.

மேலும், இந்த அரசு எப்போதும் ஏழைகளுக்கான அரசு என்ற முறையில், இப்பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்" என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, கூடலூர் பகுதியில் பெய்துவரும் கனமழையால், தேவாலா-உப்பட்டி டவர் இடையேயான சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க:நீலகிரியில் கனமழை; வீடுகளுக்குள் மழைநீர்.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details