வேலூர்: காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கடைசியாக கிங்ஸ்டன் கல்லூரியில் நடந்த 44 மணிநேர சோதனையை முடித்துவிட்டு, 9 கார்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இரண்டாவது நாளாக கல்லூரியில் சோதனை நடந்ததால் தி.மு.க நிர்வாகிகள் கல்லூரி அருகே குவிந்திருந்தனர். அதனால் அவர்கள் அமர்வதற்காக நள்ளிரவு 12.15 மணிக்கு சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டது.
முன்னதாக நேற்று பகல் 2.35 மணிக்கு வழக்கறிஞர் பாலாஜி என்பவர் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என மத்திய துணை ராணுவ படையினரிடம் தெரிவித்தார். அவர்கள் உள்ளே இருக்கும் அலுவலரிடம் கேட்டதை அடுத்து, சோதனை நடைபெறுவதால் யாரையும் அனுமதிக்க முடியாது என மறுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (ஜனவரி 4) ஒரு கார் மட்டும் கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து வெளியே சென்றுள்ளது. அதில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எடுத்து சென்றதாக அலமாக்கத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தது.
அதிரடி சோதனை
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு உள்ளது. இதே வீட்டில் தான் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தும் வசித்து வருகிறார்.
ஆளில்லாத வீட்டில் சோதனை எப்படி நடத்துவது என அவர்களுக்குள் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுகுறித்து எம்.பி கதிர் ஆனந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதே நேரத்தில் வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ளது. அங்குள்ள அவருடைய வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்திற்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
வீடுகளில் சோதனை
இந்த மூன்று இடங்களிலும் மத்திய துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமைச்சர் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்துள்ளனர் என்ற தகவல் அறிந்து அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பு தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்திருந்தனர்.
இதனையடுத்து, கதிர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி துணை மேயர் சுனில்குமார், பகுதிச் செயலாளர் வன்னியராஜா, வழக்கறிஞர் பாலாஜி ஆகியோரிடம் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அலுவலர்கள் கையெழுத்து பெற்றனர்.
பின்னர், பகல் 2.15 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கதவு திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலர்கள் கதிர் ஆனந்த் பரிந்துரைத்த மூன்று பேரின் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கிய ஆவணங்கள்
அப்போது 2 அறைகளின் பூட்டு கடப்பாரை, சுத்தியல் மூலம் உடைத்து சோதனை செய்ததாக கூறப்பட்டது. நள்ளிரவு அமைச்சர் வீடு முன்பு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் வந்து கொசு மருந்தை தெளித்துவிட்டுச் சென்றனர்.
நேற்று முன்தினம் (ஜனவரி 3) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. அங்கிருந்து சில கவர்களில் ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
வேலூர் மாவட்ட விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.20 லட்சத்திற்கு அதிகமான கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியதாக அதிகார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வீட்டில் சோதனை நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. அவருடைய உறவினர் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை நிறைவுபெற்றது.
முடிவுக்கு வந்த சோதனை
இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மட்டும் சோதனை தொடர்ந்தது. நேற்றிரவு கல்லூரியில் இருந்து அமலாக்கத்துறையினர் வந்த ஒரு கார் மட்டும் வெளியே சென்றது. அதில் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, காலையில் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கல்லூரி ஊழியர்களின் அடையாள அட்டையை மத்திய துணை ராணுவப் படையினர் சோதனை செய்தனர். அதன் பின்னரே அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
முடிவாக 44 மணி நேரம் சோதனை முடிந்து நள்ளிரவு 2.30 மணியளவில் ஒன்பது கார்களில் கல்லூரியை விட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே சென்றனர். அவர்கள் வசம் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், சென்னையில் வைத்து சோதனை குறித்து விரிவாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.