வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 31ஆம் ஆண்டு குருபூஜை நாளை நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று அவரது உருவ சிலைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தில் தண்ணீர் தேங்காதவாறு பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.
பல இடங்களில் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். தமிழக அரசின் நிலைப்பாடும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்பதே. சில இடங்களில் வீடுகளை கட்டி உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. அது நியாயமும் இல்லை. அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.