"திமுகவும், காங்கிரஸும் உங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி இல்லை" - துடைத்தெறிய வேண்டிய கட்சி என்ற மோடி பேச்சுக்கு துரைமுருகன் பதில்! தருமபுரி:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காகக் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டணி கட்சியினர் என அனைவரும் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணி சார்பில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து, தருமபுரி இண்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய துரைமுருகன், " நாடாளுமன்றத்திற்குச் செல்ல சில தகுதி வேண்டும், பாடத்தெரிந்தவன் கச்சேரிக்குச் செல்வதுபோல, ஆடத்தெரிந்தவன் மேடைக்குச் செல்வது போல, ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தவர்கள் மட்டும் தான் நாடாளுமன்றத்திற்குச் செல்ல முடியும். இல்லையென்றால், அவர்கள் கட்டடங்களை வேடிக்கைதான் பார்ப்பார்கள் என தனது பாணியில் தெரிவித்தார்.
ஆகையால் இவர்தான் தகுதியானவர் என முதலமைச்சர் மணியை தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளார். இந்த தேர்தலில் ஒவ்வொரு நாளும் தங்களது அணியை மாற்றிக்கொள்ளும் கட்சிகளுக்கும், திமுகவிற்கும் போட்டி இல்லை. திமுகவுக்கும் மோடிக்கும் தான் போட்டி. ஆனால், மோடி தான் ஆட்சிக்கு வந்தால் திமுகவைத் துடைத்தெறிய வேண்டும், அழித்து விடுவேன் என வீர வசனம் எல்லாம் பேசுகிறார். மற்றொரு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் துடைத்தெறிய வேண்டிய கட்சி என்கிறார். திமுகவும், காங்கிரஸும் உங்கள் வீட்டு குப்பையைத் தொட்டி இல்லை என காட்டமாகப் பேசினார்.
தமிழ்நாட்டில் திமுகவை என்ன குறை சொல்லப் போகிறீர்கள். சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்புப் பணம் உள்ளது, அதை அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்று சொன்னீர்கள். தற்போது அங்கு சென்று பார்த்தேன் பணம் இல்லை என்று கூட சொல்லுங்களேன். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்கிறார்கள்; அதுபோல, நீங்களும் 4 பொய் சொல்லித் தேர்தலில் நில்லுங்கள்.
நான் சுமார் 53 ஆண்டுகள் கலைஞரின் மடியில் வளர்ந்தவன். ஆனால், கலைஞரை மிஞ்சியவர் மு.க.ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஸ்டாலின் கூறினார், "எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல எனக்கு வாக்களிக்காத மக்களும் வாழ்த்துகிற அளவுக்கு ஆட்சி நடத்துவேன்" என்று. இதுதான் ஜனநாயகம் என ஆப்பிரிக்கன் கூறியதற்குச் சமமாக ஆட்சி நடத்துகிறார்.
குறிப்பாகப் பள்ளி குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு ரூ.1000, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000; தாய்மார்கள் கட்டணமில்லா பேருந்து என பல திட்டங்களைச் செய்துள்ளார். இதற்காக மத்திய அரசு ஒரு ரூபாயாவது நிதி கொடுத்திருக்கிறீர்களா. சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்தனர். பிரதமர் மோடி அவர்களே, ஒரு நாளாவது மக்களை நேரில் வந்து பார்த்ததுண்டா. அப்போதுதான் மோடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தீர்கள். வானத்திலேயே பறந்தீர்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்! - Lok Sabha Election 2024