அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் 3வது மண்டல மாநாடு இன்று (பிப்.17) நடைபெற்றது.
மாநாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, "அறிவுசார் சமுதாயம் அமைக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது உச்சரிப்பில் தவறு இருந்தால் திருத்துங்கள் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 500 அறிவியல் ஆசிரியர்கள் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அறிவியல் பெட்டகத்தை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதைப் பயன்படுத்தி ஒரு லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு அறிவியல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் பயிற்சிபெற்ற 192 மாணவர்களில் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 87 மாணவர்கள் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். 6 முதல் 9 வரை படிக்கும் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.
ஒரு மாணவருக்குக் கூட கற்றல் குறைபாடுடன் இருக்க கூடாது என்பதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னந்துர் கிராமத்தைச் சேர்ந்த தருமபுரி அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவி தைவான் நாட்டில் உயர்கல்வி படித்து வருகிறார்.
தமிழக அரசு 57 திட்டங்களை பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் செயல்பாடுகளை கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டி வருகிறது.
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை. அது பெருமையின் அடையாளமாக மாற்றி வருகிறோம். அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இதுவரையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த கொடையாளர்கள் 782 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டை காக்கக் கூடிய இளைஞர் சக்தியை கொடுக்கக் கூடியவர்கள் தான் பெற்றோர்கள். ஒவ்வொரு வீட்டிலும் தாயும், தந்தையும் தெய்வங்கள். அவர்களை போற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வந்தபின்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் பொறுப்புடன் கவனிக்க வேண்டும்.
அவர்களிடம் அன்பாக பேசி பழக வேண்டும். எப்போதும் தங்கள் பிள்ளைகள் செல்போன் மற்றும் கணினியை பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களிடம் சென்று பொறுப்பாக அதன் விளைவுகளை எடுத்துக் கூறவேண்டும். தற்போது உள்ள சுழலில் மாணவர்கள் வெளியில் சென்று விளையாடமல் வீட்டிலேயே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செல்போனையே பார்த்துக்கொண்டிருந்தால் ஏதாவது ஒரு மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும்" என்றார்.
முன்னதாக இந்த மாநாட்டில் பள்ளிக் குழந்தைகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
தருமபுரி மாநாட்டில் இருந்து தமிழக முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:தமிழக வெற்றி கழகம் பெயர்ப் பிழை; ‘க்’ சேர்க்க உத்தரவிட்ட விஜய்!