சென்னை:சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் எதிர் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, '' பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் 99 பேர் 2019 உயர்நிலைப் படிப்பை முடித்தனர். இது 2024 இல் 100 ஆக உயர்ந்துள்ளது. பெண்களில் இந்த எண்ணிக்கை 97.5 சதவீதத்தில் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. மேல்நிலைப் பள்ளியில் ஆண்களின் சதவீதம் 81.3 லிருந்து 89.2 சதவீதமாகவும், பெண்களின் சதவீதம் 89.4 சதவீதத்தில் இருந்து 95. 6 ஆக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, அதன் செயல்பாடுகள், வரும் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.
அரசு பள்ளிகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியுள்ளேனா என்பதை தெரிந்துக் கொள்ளாமல் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுதிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான நிதியை, கொள்கைகளை விட்டுக் கொடுத்து ஒன்றிய அரசிடம் பணத்தை வாங்க வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது.
விளக்கம் அளித்து சோர்வடைகிறோம்
செய்திகளை வெளியிடும் போது ஒவ்வொரு முறை விளக்கம் அளித்து சோர்வடைகிறோம். பள்ளிக் கல்வித் துறை என்பது எங்கள் பிள்ளை.. நாங்கள்தான் வளர்த்து எடுக்க வேண்டும். இதை யாருக்கும் தத்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள், எங்களது பிள்ளைகளை நாங்களே வளர்த்துக் கொள்கிறோம்.