சென்னை: பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டதுடன், பிரான்ஸ் நூலகத்தின் நிர்வாக அலுவலரை, தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து, தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிக தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு 'கனவு ஆசிரியர்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது.
அதில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற, 32 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், 22 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 54 பேர் அக்.23 முதல் அக்.28 வரை ஆறு நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தவெக மாநாடு: வெளுக்கும் வெயில்.. ஒவ்வொரு முகாம்களிலும் 50 பேருக்கு சிகிச்சை..! ஸ்தம்பிக்கும் வி.சாலை..
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுடன் சேர்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் அரவிந்தன் ஆகியோரும் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி மற்றும் ஆசிரியர்களுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை பார்வையிட்டுள்ளனர்.
தமிழ், கிரேக்கம், அரபி போன்ற தொன்மையான மொழிகளின் 5,000 ஓலைச்சுவடிகளைக் கொண்டுள்ள இந்நூலகம், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. 2,300-க்கும் அதிகமான பணியாளர்களின் உதவியுடன் செயலாற்றும் இந்நூலகம் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த நூலகத்தின் நிர்வாக அலுவலர்களிடம் தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தாகவும் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்